Friday, May 26, 2017

நூறு நாள் வேலைக்குப் போயிட்டு அப்படியே வர்ர வழியில பட்டாளத்தார் வீட்டு எள்ளு வயக்காட்டுல கிடந்த நண்டுக்கா பில்லை ஆடுவொளுக்குன்னுப் புடுங்கி, வெயிலுக்கு தலைக்கு போட்டிருந்த பழந்துணியால, அரிச்ச பில்லுவொளயெல்லாம் மூட்டக் கட்டி வண்ணாந்துணிமூட்டக் கணக்கா தலையில் வச்சிக்கிட்டு வந்துக்கிட்டு இருந்த நீலாவதிக்கு அவ கையி கால நம்பித்தான் பொழப்பு.
செறு வயசிலேயே புருசன பறிகொடுத்தவ, தான் கூலி வேல செஞ்சு செறுவ செறுவ சேத்தக் காசுலயும், இருந்த ஒரு மா நெலத்தை வித்தும்தான் யாரு தொணையுமில்லாம ரெண்டு வருசத்துக்கும் முந்தி தன்னோட ஒரே மவ கலைவாணிய பக்கத்தூர்ல கட்டிக்கொடுத்தா. சொத்துன்னு இப்போ அவளுக்கு இருக்கது ஒரு கூர வீடும்,அத சுத்திக் கெடக்குற நாலு செண்டு கட்டு மனையும், அப்புறம் கெவருமண்டுல கொடுத்த நாலு வெள்ளாடுவொளும் அதுவொ போட்ட குட்டியளுந்தான்.
பில்லு மூட்டைய தலையில் வச்ச வாவுலயே வந்துக்கிட்டு இருந்தவளப் பாத்ததும் வீட்டுக்கு முன்னாடி இருக்கும் மாமர நெழலுல படுத்துக்கிடந்த ஆட்டுக் குட்டிகள்ள ரெண்டு, ஆடா பூனையான்னு கொழப்புறாப்டி கத்திக்கிட்டே நீலாவதியப் பாத்து ஓடி வந்துச்சுவொ. வந்த வேகத்துலயே ரெண்டு குட்டிகளும் நீலாவதி மேல தாவித் தாவி விழுந்ததைப் பாத்துட்டு ,” ஏ புள்ளையளா, செத்த இருங்க, ஒங்களுக்குத்தான கொண்டுக்கிட்டு வரேன்” என்று ஏதோ பெத்த புள்ளையள்ட்ட பேசுறாப்டி பேசிக்கிட்டே, வர வழியில புண்ணிய மூர்த்தி கடையில , ”நூறு நாளு வேல செஞ்ச காசு வந்தொடனே ஓங்கடனெல்லாம் தீத்துர்ரேன், ஒரு உப்பு சோப்பு மட்டும் கொடுத்துரு புண்ணியம்” என்று சங்கடமா வழிஞ்சிக்கிட்டே வாங்கி இடுப்புல சொருகிக்கிட்டு வந்த உப்பு சோப்பை எடுத்து, வீட்டு பொறக்கோடில கெடக்கும் துணி தோக்கிற கல்லு மேல போட்டுட்டு அப்படியே பில்லு மூட்டய கொண்டு வந்து திண்ணைய ஒட்டிக் கெடந்த ஆட்டுக்கல்லு மேல போட்டாள்.
”ம்ம்ம்ம்ம்” என்று மொணவிக்கிட்டேவும், பரபரன்னு வாலை ஆட்டிக்கிட்டும் துணி மூட்டையிலிருந்து வெளியில நீட்டிக்கிட்டுத் தெரிஞ்சப் பில்லுவொள கடிச்சிட்டு இருந்த ஆட்டுக் குட்டியளப் பாத்ததும், அடிக்கிற வெயில்ல வேதன பாவ வந்தவ மொகத்துல சட்டுன்னு மம்பானத் தண்ணிய ஊத்தின மாறி பூரிப்புப் பூத்துச்சு.
கையில வச்சிருந்த நூறு நாள் வேலை அட்டைய கூரையில சொருவுன நீலாவதி , ஒர சாக்கு வச்சித் தச்சு மூடியிருந்த மூங்கித் தட்டிக் கதவத் தள்ளிவிட்டு வீட்டுக்குள்ள நொழஞ்சா. அந்த மூங்கித் தட்டிக் கதவுக்குன்னு பூட்டெல்லாம் இல்லை, அப்படியே ஒரு சணலால செவத்துல இருக்க கொக்கியில முடிச்சுப் போட்டுட்டு போறதுதான். அந்த சணல் முடிச்சும் எதுக்குன்னா மூங்கித் தட்டிய தள்ளிவிட்டுட்டு இருக்கிற பழையக் கஞ்சிய நாயிவொ நக்கிட்டு போயிடாம இருக்கத்தான்.
குண்டான்ல இருந்தப் பழைய கஞ்சியயையும் , கடிச்சிக்கிற நேத்து வச்ச புளிக்கொழம்பில் கெடந்த மாங்காக் கீத்தையும் எடுத்துக்கிட்டு வெளில வந்தவ, சாணிப் போட்டு மொழுவி பச்சப்பச்சேர்ன்னு இருந்தத் திண்ணையில், செவத்துல சாஞ்ச மேனிக்கு கால நீட்டி ஒண்ணு மேல ஒண்ணா போட்டு ஒக்காந்து கஞ்சியக் கரச்சுக் குடிக்க ஆரம்பிச்சா.
வீட்டுக்குப் பொறவண்டேயிருந்து ”ம்ம்ம்மே” என்று ஒண்ணு மாத்தி ஒண்ணா கத்திக்கிட்டு் இருந்த பெரிய ஆடுவொளின் சத்தத்தைக் கேட்டதும் கஞ்சியக் குடிச்ச வாக்கிலேயே, “இங்கரே காலமரதான அவ்வளோ தழ ஒடிச்சி போட்டுட்டுப் போனேன், ஒங்கக் கொட பசிக்கிற மாறிதான எனக்கும் பசிக்கும், சும்மா கெடங்க செத்த நேரம், கஞ்சியக் குடிச்சிட்டு வாரேன்” என்று ஆடுகளுக்கு பதில் கொரல் கொடுத்தவள், பிறகு மனசு கேக்காம கஞ்சிய அப்படியே வச்சிட்டு, பில்லுல கொஞ்சத்த சோத்துக்கையில தண்டாம வல்லாங்கையாலயே இடுப்போட இடுக்கி அள்ளிக்கிட்டு ஆடுவொளுக்குப் போடப் போனாள்.
“எதுக்கு இப்புடி பறக்குறிய ஹே” என்று ஆடுகளத் திட்டிக்கிட்டேப் பில்லைப் போட்டுவிட்டு திரும்பியவளின் கண்ணுல ரோட்டுல போய்க்கிட்டிருந்த அம்பலாரு மாரிமுத்து படவும், சட்டுன்னு புள்ளயார் கோயில் திருநாளுக்கு கொடுக்க வேண்டிய வரிப்பணம் ஞாவகம் வந்திருச்சு.
உடனே தன்னாப்புல வெரல விட்டு “செவ்வா, பொத,சாழன்” என்று நூறு நாள் வேலைக்கு எத்தன நாள் போயிருக்கோம் என்று எண்ணிக்கிட்டே வந்து திண்ணையில் குந்தி மறுபடியும் கஞ்சியக் குடிக்க ஆரம்பிச்சா.
போன வருஷம் திருநாளப்போ பஞ்சம் பெருசா இருந்ததுல ,” ஒத்தப் பொம்பளயா கெடந்து அல்லாடிக்கிட்டுக்கிட்டு கெடக்கா, அவ கிட்ட என்னத்த வரிப்பணம் கேட்டோம், பாவம்” என்று எனரமுத்து இவக்கிட்ட வரிப்பணத்தை கேட்காம விட்டுட்டான் மாரிமுத்து. ஒருத்தர் விடாம மத்த பங்காளி வீடுகள்ள வரி வசூலிச்சத தெரிஞ்சிக்கிட்ட இவ, தன்னிடம் கேட்காம விட்டதை தாங்கிக்க முடியாம ஆத்தாத்துப் போனா. மிஞ்சிப்போனா வருசத்துல ஒரு வாட்டி வைத்தீஸ்வரன் கோயிலுக்கு நடைபயணமா போறதும், அர சாமான் வாங்க அரியலூர் போறதையும் தாண்டி அவ ஒலகம்ன்றது ஒரு அஞ்சு கிலோ மீட்டருக்குள்ளதான். அப்படியாப்பட்டவளுக்கு அவ வாழ்ற சூழல்ல இருக்கிற பெரிய கௌரவம் கோயிலுக்கு வரி கொடுக்கிற குடியானவளா இருக்கதுதான்.
தன்னை அம்பலாரு இப்படி அசிங்கப்படுத்திட்டானேன்னு நெல கொள்ளாம தவிச்சவ, தன் புருஷன் செத்ததும் கழட்டி வச்ச ஒரு கிராம் மூக்குத்திய எடுத்துக்கிட்டு நேரா ஊரணிக்காட்டு செட்டியார் அடவு கடையில் அடவு வச்சிட்டுக் கொண்டு வந்த ரூவாயோட அம்பலாரு வீட்டு வாசல்ல போயி நின்னு ,”அம்பலாரு மாமா, இதெல்லாம் மொறையா? ஊரெல்லாம் ஒருத்த வீடு பாக்கியில்லாம வரி வாங்கியிருக்கிய, என்ன மட்டும் எதுக்கு ஒதுக்கினிய, நானென்ன தள்ளுப்பட்ட சாதியா? , கோயிலுக்கு வரிப்பணம் கொடுக்க முடியாம வக்கில்லாமயா பொயித்தேன்” என்று ஆங்காரமா மூச்சு விடமாப் பேசிவிட்டு ,”இல்லப்புள்ள ஒன்னைய செரமப்படுத்தபுடாதுன்னுதான் “ என்று எட மறிச்சி பேச வந்த மாரிமுத்தோட பேச்சைக் காது கொடுத்துக் கூட கேக்காம , ஐறூறு ரூவாயை எடுத்து அம்பலாருவீட்டு திண்ணையில வச்சிட்டு அவ பாட்டுக்கும் போயிக்கிட்டு இருந்தா.
இதனாலேயே இந்த வருஷம் மொத ஆளா இவக்கிட்டதான் வரியைக் கேட்டான் மாரிமுத்து. அடுத்த வாரம் கொடுக்குறேன்னு சொல்லியிருந்தா, இந்தக் கதையெல்லாம் மனசுக்குள்ள ஓட விட்டவ, “இன்னும் மூணு நாள் கடக்கு காசு வரதுக்கு , இல்லாட்டியும் ஏங்க தாங்கலுக்குன்னு வச்சிருக்க மூக்குத்திய வச்சிக்க வேண்டியததுதான்னு நெனச்சிக்கிட்டே கஞ்சியக் குடிச்சு முடிச்சவ, அங்கன இருந்த மம்பானையில தண்ணிய கொஞ்சமா வாத்துக் குடிச்சிட்டு அப்படியே பாத்திரத்தையும் அலசி செவத்தோரமா வச்சிட்டு, முந்தானைய ஒதறிப் போட்டு அங்கனயே கட்டைய சாச்சு கண்ண மூடினா.
நீலாவதி கண்ணசந்த அந்த நேரத்துல சொசேட்டிலேர்ந்து சுமிலி எண்ணெய் வாங்கிக்கிட்டு அந்தப் பக்கமா வந்துக்கிட்டு இருந்தா பக்கத்து வீட்டு ரஞ்சிதம். நீலாவதி வீட்டு பொறக்கோடி வழியா வந்தவளின் கண்ணுல துணித் துவைக்கிற இடத்தில கெடந்த உப்பு சோப்புப் படவும் படக்குன்னு குனிஞ்சி அத எடுத்தவ டக்குன்னு மடியில் சொருவிக்கிட்டு அவ பாட்டுக்கும் போயிட்டு இருந்தா.
ஒரு பத்து நிமிஷம் போயிருக்கும், நாயிவொ ரெண்டு ஒண்ணோட ஒண்ணு சண்ட போட்டு கொலய்க்கிற சத்தம் கேட்டதும் அப்படியே கண்ண மூடி படுத்துக் கெடந்தவ பட்டுன்னு எந்திரிச்சி “ஏ நேப்பண்ணையளா, போறியளா அங்கிட்டு” என்று பக்கத்தில கெடந்த மூங்கிக் கழிய தூக்கி நாய்வொளப் பாத்து விட்டெறிஞ்சவ, அப்படியே எந்திரிச்சி கொடிக் கவுத்துலக் கெடந்த அழுக்குத் துணியள அள்ளிக்கிட்டு பொறக்கோடிக்கு போனா. தண்ணி புடிச்சி வச்சிருந்த அன்னக்கூடையில துணியள முக்கி வச்சிட்டு திரும்புனவ, தோக்கிற கல்லுல சோப்பு இல்லாததப் பாத்ததும், “ங்கொப்புரான கொப்பந்தன்னான, எங்கடி இங்கின வச்ச உப்பு சோப்பக் காணும்” என்று சத்தம் போட்டுப் பேச ஆரம்பிச்சா.
தெக்கி வீட்டு ராசாமணி, “ஏட்டியே நீலாதி, என்னாடி கத்திக்கிட்டு கெடக்குற” என்றபடியே நீலாவதி நிக்கிற இடத்துக்கு வந்தா. “ங்கொப்புரான, இப்பதாண்டி இங்கின சோப்பப் போட்டுட்டுட்டுப் போயி, கஞ்சிய குடிச்சிட்டு துணியள அள்ளிக்கிட்டு வரேன் அதுக்குள்ளார தூக்கிக்கிட்டுப் பொயித்தாளுவொ” என்று சொன்னதும், “உம்மா, உப்பு சோப்ப தூக்க வராளுவொள, வெக்கங்கெட்ட தீவினடி இதெல்லாம், இங்கனதான் எங்கினாச்சும் கெடக்கும் பாரு” என்று சொன்ன ராசாமணி சுத்தி முத்தியும் சோப்பு கெடக்கான்னு பாத்தா.
இவளுக ரெண்டு பேரும் சோப்பைத் தேடிக்கிட்டு நிக்கிறத வேலியோரமா மறஞ்சி நின்னுப் பார்த்த ரஞ்சிதம், கையில கொடத்த வச்சிக்கிட்டு அதில் இருந்த கொஞ்சூண்டு தண்ணியக் குலுக்கிக் குலுக்கி கொடத்தை கழுவிக்கிட்டே, “ஏ ராசாமணி, என்னாடி ஏதோ சத்தம் போட்டாள அவ” என்றாள்.
“உப்பு சோப்பக் காணும்னு கத்திக்கிட்டுக் கெடக்குறா” என்று சொன்ன ராசாமணியிடம், “என்னாது சோப்பத் தூக்குனாளுவொளா, ச்சை அவளும் பாவந்தானே, அவ பாவத்திலயெல்லாம் போயி விழுவலாமா?” என்று சொல்லிக்கிட்டே கொடத்தில குலுக்கின தண்ணிய வேலி ஓரமா இருந்த கனகாம்பரச் செடியில ஊத்திக்கிட்டே, “ஏட்டி நீலாதி, அங்கனதான் கெடக்கும் நல்லா தேடிப் பாருடி” என்றாள்.
ரஞ்சிதம் சொன்னதைக் கேட்டதும் திரும்பிய நீலாவதி, இந்த மாதிரி நப்பி வேலையெல்லாம் இவதான் செய்வா என்பதாய் ரஞ்சிதத்தை மொறச்ச மேனிக்கே பாத்துவிட்டு, “எந்த குச்சிக்காரியோ தூக்கிக்கிட்டு போயித்தாளுவோங்கிறேன், என்னத்த தேடிப் பாக்க சொல்ற” என்று ஆரம்பித்து, “அவ கையில கட்ட மொளைக்க, மடிஞ்சி மண்ணாப் போவ, குடி குட்டிச்சாரப் போவ” என்று அவ பாட்டுக்கும் மூச்சு விடாம பேசப் பேச அதை ரசிச்சுப் போயி பாத்துக்கிட்டு நின்னா ராசாமணி.
இந்த மாதிரி சண்டைன்னா இன்னும் அத சொறிஞ்சி விட்டு நல்லா வேடிக்கை பாப்பா ராசாமணி. ராசாமணியின் கொணம் தெரிஞ்ச அவ புருஷன் வீரையன், “ஏய் இங்கிட்டு நீ வறியா இல்லையாடி” என்று கொரல் விட்டதும், “இந்தாளு வேற” என்று முணு முணுத்துக்கிட்டே, “இப்ப என்னாங்கிறேன், ஒங்கோமணத்துக்குள்ளயேதான் குந்தியிருக்கணுமே, அங்கிட்டு இங்கிட்டு செத்த போப்புடதே? ” என்று வீரையனிடம் எரிஞ்சி விழுந்துக்கிட்ட வீட்டை நோக்கி நடந்தா ராசாமணி.
பத்து நிமிஷத்துக்கும் மேல மொய் மொய்யின்னு சாவம் விட்டவ கடைசியா “அடச்சுப் பட சாத்த” என முடிச்சி, “இருங்கடி மினியய்யா கோயில்ல போயி எலுமிச்சம்பழம் மத்திரிச்சு எடுத்தாந்து வச்சிட்டுதான் மறு வேல” என்று சொல்லிவிட்டு கையோட முனியய்யா கோயில் தெசையப் பாத்து நடக்க ஆரம்பிச்சா.
அவ அங்கிட்டுப் போன செத்த நேரத்துக்கெல்லாம் கொடத்துக்குள்ள சோப்ப வச்சி எடுத்துக்கிட்டு, நீலாவதி வீட்டு பொறக்கோடிக்கு வந்த ரஞ்சிதம் துணி தொவைக்கிற கல்லுக்கிட்ட கெடந்த ஈர மண்ண, கோழி சீக்கன சீச்சி அதுல மண்ணு மூடி கெடக்கிற மாதிரி சோப்பை வச்சிட்டு அவசர அவசரமா தெரு பைப்பை பாத்து தண்ணி புடிக்கப் போற மாதிரி போயிட்டு இருந்தா.
முனியங்கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டுப் போன நீலாவதி நேரா புண்ணிய மூர்த்தி கடைக்குதான் போயி மறுபடியும் ஒரு உப்பு சோப்ப வாங்கிக்கிட்டு திரும்பி வந்து துணி தொவைக்க ஒக்காந்தா.
ஒக்காந்த நேரத்திலேயே மண்ணு மூடிக் கெடந்த சோப்பு கண்ணுல பட்டுடுச்சு. மறுபடியும் ரஞ்சிதத்த வாயிக்குள்ளயே திட்டிக்கிட்டே அவ வீட்டைப் பாத்தா. ரஞ்சிதம் இங்கிட்டு திரும்பாமயே கவனத்தை நீலாவதி மேல வச்சிக்கிட்டு நடமாடிக்கிட்ட இருக்கதைப் பாத்த நீலாவதி “கண்டார ஓழி, நடைய பாத்தியன்ன” என்று திட்டிக்கிட்டே அந்த சோப்பை எடுத்து மறுபடியும் கல்லுல வச்சிட்டு துணிகள ஒண்ணு ஒண்ணா தொவைக்க ஆரம்பிச்சா.
’முனியங்கோயில்ல நெசமாவே மந்திரிச்சு எதுவும் கொண்டு வந்து வச்சிருப்பாளோ’ என்று பயம் தொத்திக்க , வீட்டிலேர்ந்து ஒரு கிண்ணத்தை எடுத்துக்கிட்டு வந்த ரஞ்சிதம், “ஏட்டி கொழம்பு எதுவுமா வச்ச” என்று கேட்டுக்கிட்டே நீலாவதியின் பக்கத்துல வந்து நின்னா.
”ஆமா, நாங்கொழம்புனன், நேத்து ரவையில வச்ச புளித்தண்ணிதான் கொஞ்சூண்டு கெடக்கு” என்றவளிடம், ”அதுல இத்தி குடுடி, அந்தாளு கொழம்பு வைக்கலயான்னு கத்துவான்” என்ற ரஞ்சிதம், “அதுக்குள்ளயுமாடி முனியங் கோயில் போயி திரும்பிட்ட” என்றாள்.
”உம்மா, இந்த வெயில்ல நான் போனேன் அத்தேர்தி” என்று அலுப்பாவும் கடுப்பாவும் சொன்னவ, ”தட்டுவாணி முண்டைய பொயித்து போறாளுவோ போ” என்றபடியே சோப்புக்கைய அன்னக் கூடை தண்ணியிலேயே கழுவிட்டு கைய ஒதறி எந்திரிச்சி ரஞ்சிதத்திடம் கிண்ணத்தை வாங்கிக்கிட்டு வீட்டுக்குள் போய் நொழஞ்சா.
அவ பின்னாடியே போன ரஞ்சிதம் அங்கன வெளில திண்ணையில ஒக்காந்து, “ஏட்டி போன திருநாளு கிட்டன்சுலதான ஒம்பேர பொறந்தான், தல முடி எறக்கணும்னா, மொவ வராளா, என்னாடி செய்வன செய்யப்போற, நவ எதுவும் போடுறியா?” என்றாள்.
குழம்பை ஊத்தி எடுத்துக்கிட்டு வந்த நீலாவதி, ”ஆமா, நவ போடுறேன்” என்று தன் இயலாமையை கடுப்பா சொன்னவ மேக்கொண்டு, “ ஊரணிக்காட்டுல போயி புதுத்துணிதான் எடுத்தாந்து போடணும், வெள்ளி அரணா ஒண்ணு போடுவோம்னு நெனப்பு பாப்போம்” என்று விட்டேத்தியா சொன்னவ, டக்குன்னு மொகம் பூரா பூரிப்பா மாறி, “எம்பேரன இப்பக் கிட்டன்சுல நீ பாக்கலைன்னா, என்னைய கண்டுட்டான்னா போதும், அப்படித்தான் நச்சத்திரம் மாதிரி சிரிப்பான்” என்றபடியே ஆட்டுக்கல்லுல ஒக்காந்து ரஞ்சிதத்துக்கிட்ட தன் பேரன் பெருமைய சொல்ல ஆரம்பிச்சா.
#வண்டல்_மண்_கதைகள்

Monday, December 12, 2016

பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன்


தமிழ்த்திரையுலகம் சார்ந்த கட்டுரைகள் எழுதுவதில் பாடலாசிரியர்கள் குறித்து எழுதுவது சற்றே சிரமமான காரியமாய் இருக்கிறதுகாரணம் பாடலாசிரியர்கள் குறித்த தகவல் திரட்டு அத்தனை எளிதானதாய் இருப்பதில்லைகாட்சி ஊடகங்கள்,பண்பலை வானொலிகள் தொடங்கி இணையம் வரை திரைப்பாடல்கள் குறித்து பெற முடிகிற தரவுகளில் அந்த பாடல் இடம்பெற்ற திரைப்படம்,இசையமைப்பாளர் மற்றும் பாடகர்களின் பெயர்கள் ஆகியவையே பெரும்பாலும் இருக்கின்றனஒரு பாடலின் மெட்டுக்கு ஜீவனாய் இருப்பவை வரிகள்.அந்த வகையில் இசையமைப்பாளருக்கு அடுத்த இடத்தில் பாடல்கள் குறித்தான தகவல்களில் இடம்பெற வேண்டியது பாடலாசிரியரின் பெயராய் இருக்க வேண்டும்அப்படியிருக்க பெரும்பாலும் ஊடகங்கள் பாடலாசிரியர்களின் பங்களிப்பைப் பற்றி பெரிதாய் கண்டுகொள்ளாதது குறித்து எப்போதும் பெரிய வருத்தம் உண்டு

இப்படி பாடலாசிரியர்கள் பெயர்கள் இடம்பெறாமல் போவதன் பின்னணியில் காரணமொன்றை யூகிக்கிறேன்ஒரு திரைப்பாடலின் உருவாக்கத்தில் பாடலாசிரியர் பற்றிய குறிப்பு இடம் பெறும் இடங்கள் இரண்டுஒன்று திரைப்பாடல்கள் பதிவு செய்யப்பட்டு வெளிவரும் ஒலிபேழைகளின் உறை மற்றொன்று திரைப்படத்தின் தொடக்கத்தில் அத்திரைப்பட உருவாக்கத்தில் பங்குபெற்றோரின் பெயர்கள் வருகிற டைட்டில் கார்ட்ஒரு திரைப்படத்தின் மொத்த பாடல்களையும் ஒரே பாடலாசிரியர் எழுதியிருந்தால் இக்குறிப்புகள் போதுமானவைஆனால் ஒரே திரைப்படத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பாடலாசிரியகள் பங்கு பெறும்போது , இன்ன பாடலை இன்னார் எழுதியது என்று தெளிவான தகவல்கள் இல்லாமல் பொதுவாக பாடலாசிரியர்கள் என்று அச்சடித்திருப்பார்கள்ஒலிப்பேழைகளில் ஒவ்வொரு பாடலையும் பாடியவர்கள் குறித்து தனித்தனி தகவலை அச்சிடுபவர்களுக்கு கூடுதலாய் பாடலாசிரியர் பெயரை அச்சிடுவதில் என்ன சிரமமோ (மிக அரிதாக சில ஒலிப்பேழைகளிலும்டைட்டில் கார்டிலும் தனித்தனியே குறிப்பிட்டிருப்பார்கள்).இப்போதைய டிவிடி கலாச்சாரத்திலும் இந்த போக்கு தொடர்வது மாற்றிக்கொள்ளப்பட வேண்டிய விஷயம்ஊடக திரைப்பாடல் நிகழ்ச்சிகளில் பாடலாசிரியர்களின் பெயர் இடம்பெறாமல் போக இந்த குழப்பமும்கூட காரணமாய் இருக்கலாம்.

மிக ரசித்து சிலாகிக்கும் பாடல் வரிகள் நமக்கு அத்துனை பரிட்சயம் இல்லாத ஒரு பாடலாசிரியருக்கு சொந்தமானது என்று அறிய வரும்போது நமக்குள் ஒரு ஆச்சர்ய மின்னல் தோன்றுமில்லையாஅப்படியான மின்னல் தோரணங்களுக்கு சொந்தக்காரர் பாடலாசிரியர் புலவர் புலமைப்பித்தன் அவர்கள்புலமைப்பித்தன் பரிட்சயமில்லாத பெயரா என்பவர்களுக்கு அறுபதுகளின் இறுதிலும் எழுபதுகளிலும் மிக பிரபலமாய் இருந்திருந்தாலும் அதற்கு அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கு பாடலாசிரியர் என்றாலே திரைப்பாடல்களை அதிக எண்ணிக்கையில் எழுதிக்குவித்த வாலியும் , வைரமுத்தும்தான் நினைவிற்கு வருவார்கள் என்பதை நினைவு கூறுகிறேன்.எம்.ஜி.ஆர் அவர்களின் முத்திரைப் பாடல்களாக அறியப்படுகின்ற ’நான் யார் நீ யார்’, ’நாளை உலகை ஆள வேண்டும்’, ’நீங்க நல்லா இருக்கோணும்’,’சிரித்து வாழ வேண்டும், ’ஒன்றே குலமென்று’ போன்ற பல பாடல்களை எழுதியவர் புலமைப்பித்தன்சிவப்புச் சிந்தனைவாதியான புலமைப்பித்தனின் பொதுவுடமை சித்தாத்தங்களை தாங்கிய வரிகளுக்கு ரசிகரான எம்.ஜி.ஆர்தனது திரைப்படங்களில் புலமைப்பித்தனுக்கு தொடர் வாய்ப்புகளை வழங்கி முன்னணி பாடலாசிரியராக வளர்த்துவிட்டார்எம்.ஜி.ஆரின் மக்கள் செல்வாக்கின் வளர்ச்சியில் புலமைப்பித்தனின் வரிகளுக்கும் பங்கு உண்டு என்பதும் இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்.

பொதுவாக கம்யூனிச சிந்தனைவாதிகள் எப்போதும் போராட்ட குணத்தோடும் புரட்சி கருத்துக்களை ஆக்ரோஷமாய் வெளிப்படுத்துபவர்களாகவுமே அறிவோம்.ரசனை சார்ந்த விஷயங்களில் அவர்களைப் பற்றி யோசனையே செய்ய இயலாத ஒரு பிம்பம்தான் நமக்குள் உறைந்திருக்கும்ஆனால் புலமைப்பித்தன் அவர்கள் திரைப்பாடல்களில் பொதுவுடமைக் கருத்துக்களை கொடுத்தற்கு நிகராக ’பாடும்போது நான் தென்றல் காற்று’, ’நீ என்னென்ன சொன்னாலும் கவிதை’,’ஆயிரம் நிலவே வா’ என காதல் பாடல்கள் எழுவதிலும் கைதேர்ந்தவர் என்பது இன்னொரு ஆச்சர்யம்அடிப்படையில் தமிழாசிரியர் என்பதால் அதன் பொருட்டு அவருக்கிருந்த இலக்கிய வாசிப்பை அவர் எழுதும் காதல் பாடல்களில் பிரதிபலிப்பதில் உணரலாம்.எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும்கூட ரசனைக்குரிய பல காதல் பாடல்களை அவர் எழுதியிருக்கிறார்அவற்றில் மிகப் பிரபலாமன் பல பாடல்கள் இருந்தும் அவை புலமைப்பித்தனின் வரிகள் என பெரும்பாலானோர்க்கு தெரிவதில்லைஇந்தக் கட்டுரையின் நோக்கம்கூட எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் புலமைப்பித்தனின் முத்திரைகளை அலசுவதாய் கொள்ளலாம்.

புலமைப்பித்தனைக் குறித்த என்னுடைய தேடலும்கூட தொண்ணூறுகளின் தொடக்கத்தில் வெளிவந்த ராஜா கைய வச்சா திரைப்படத்தின் ‘மழை வருது மழை வருது குடை கொண்டு வா’ பாடலில்

உலகம் எங்கும் நமது ஆட்சி
நிலமும் வானும் அதற்கு சாட்சி
நிலமும் வானும் நமது ஆட்சி
உலகம் எங்கும் அதற்கு சாட்சி

என்ற இந்த வரிகளின் வார்த்தை விளையாட்டை ரசித்ததிலிருந்துதான் தொடங்கியதுஇது வாலியின் விளையாட்டாகத்தான் இருக்குமென்று உறுதி செய்ய தேடியதில் புலமைப்பித்தன் என்று அறிந்து ஆச்சர்யம்அதன் தொடர்ச்சியாய் புலமைப்பித்தனை தேடுகையில் அடுக்கடுக்காய் ஆச்சர்யங்கள்.தனது அகவை முப்பதுகளில் இருக்கும் பொழுது முதிர்ச்சியான சிந்தனைகளை பாடல்களில் கொடுத்தவர் அகவை அறுபதுகளில் இருக்கும்போது இளமையான காதல் வரிகளால் புகுந்து விளையாடியிருக்கிறார்.

ஈரமான ரோஜாவே படத்தின் ’அதோ மேக ஊர்வலம்’ பாடலின் மெட்டும் இசைக்கோர்ப்பும் தெய்வீக அம்சம் பொருந்தியதாக உணர வைக்கக்கூடிய வகையில் இசையமைத்திருப்பார் இளையராஜாஅந்த பாடலில் காதலியின் முகத்தை நிலவுக்கும்கூந்தலை மேகத்திற்கும் என நிறைய தேய் வழக்கு உவமைகளைத்தான் பயன்படுத்தியிருப்பார்  புலமைப்பித்தன்ஆனாலும் ‘உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான்என்று மயிர் கூச்செரிய வைக்கும் அற்புதமான கற்பனைகளையும் கட்டவிழ்த்துவிட்டு தனது வரிகளால் அந்த பாடலை வேறொரு உச்சத்திற்கு நகர்த்தியிருப்பார்இதே பாடலில் ‘இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம்என்று விவகாரமான வரியொன்று வரும்அந்த வரியினை கேட்கும் தோறும் காமம் சார்ந்து அழகியலோடு எழுதுவதில் புலமைப்பித்தனின் சிந்தனையே ஒரு ராஜகோபுரம் என்று தோன்றும்காதல் பாடல்களில் காம ரசத்தை சொட்ட சொட்ட தோய்த்து கொடுப்பதில் புலமைப்பித்தனை கண்ணதாசனுக்கு அடுத்த இடத்தில் வைக்கலாம்காதலும் காமமும் ஒன்றைவிட்டு ஒன்று அல்ல என்பதை இவரின் காதல் பாடல்களில் ஒளிந்து நின்று கண்ணடிக்கும் குறும்பு வரிகளில் உணரலாம்புரிந்து கொள்ளும் ரசனைக்காரர்களிடம் குறுநகையொன்றை களவாடிச் செல்லும் இயல்பை கொண்டவை அவைஉதாரணமாக தங்க மகன் படத்தின் ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோபாடலில் இந்தத் தன்மையை கவனிக்கலாம்.

வீணையெனும் மேனியிலே தந்தியினை மீட்டும்
கைவிரலில் ஒரு வேகம் கண் அசைவில் ஒரு பாவம்

இந்த வரிகளில் ஏதேனும் விரசம் தெரிகிறதாஆனால் அது உணர்த்தும் பொருளை நேரடியாகச் சொன்னால் அது விரசமாகிவிடும்இப்படி காமத்தை மறை பொருளாய் பாடல் வரிகளில் கடத்துவதில் புலமைப்பித்தன் ஜித்தன்இதே பாடலில் ‘மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே’ என்ற ஒரு வரியிருக்கும்இந்த ’தொட்டில் மாங்கனி’ உவமையைசிவா படத்தின் ‘இரு விழியின் வழியே நீயா வந்து போவது’ பாடலில் ‘தொட்டில் இடும் இரு தேமாங்கனி’ என்றாக்கி அதையும் ரசிக்க வைத்திருப்பார்போலவே நீங்கள் கேட்டவை திரைப்படத்தின் ‘ வசந்த ராஜா’ பாடலில் தான் பயன்படுத்திய ’வெண்பஞ்சு மேகங்கள் உன் பிஞ்சுப் பாதங்கள்’ என்ற வரியைத்தான் ‘அதோ மேக ஊர்வலம் பாடலில் ‘உனது பாதம் அடட இளவம் பஞ்சு’ என்று ஆக்கியிருப்பார்இப்படி தாங்கள் எழுதிய வரிகளையே மீண்டும் பயன்படுத்திக் கொள்வதற்கு வாலி,வைரமுத்து தொடங்கி அனேக பாடலாசிரியர்களுக்கும் உதாரணங்கள் சொல்லலாம்ஆனால் அவற்றை எப்படி மீள பயன்படுத்துகிறார்கள் என்கிற இடத்தில்தான் புலமைப்பித்தன் போன்ற பாடலாசிரியர்கள் ரசிக்க வைக்கிறார்கள்சிவா படத்தின் ’அடி வான்மதி’,இது நம்ம ஆளு படத்தின் ’காமதேவன் ஆலயம்மற்றும் ‘அம்மாடி இதுதான் காதலா’ போன்ற பாடல்களும் இந்த காலக்கட்டத்தில் புலமைப்பித்தனின் வரிகளில் குறிப்பிடப்பட வேண்டியவை.

அத்திக்காய் காய் காய்”,”வான் நிலா நிலா அல்ல”,”பார்த்தேன் சிரித்தேன்” போன்ற திரைப்பாடல்களில் கவிஞர் கண்ணதாசன் கையாண்ட சுவாரஸ்ய சொல் விளையாட்டை அதன் பின் நிறைய பாடலாசிரியர்கள் முயன்றிருக்கிறார்கள்புலமைப்பித்தனும் தன் பங்கிற்கு கொடுத்து அசத்திய அற்புதமான பாடல் மௌனம் சம்மதம் படத்தின் ‘கல்யாண தேனிலா’.இந்த பாட்டில் பல வரிகளை மேற்கோள் காட்டி சிலாகிக்கலாம்குறிப்பாய் ,

உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா” என்ற வரிகளின் கவித்துவம் இப்பாடலின் உச்சம் என்பேன்.

புலமைப்பித்தன் எழுதிய காதல் பாடல்களில் பலருக்கும் விருப்பப் பாடலாய் ஒன்று இருக்குமென்றால் அது நாயகனின் ‘நீ ஒரு காதல் சங்கீதம்’ பாடலாய்த்தான் இருக்கும்அதனைப் பற்றிச் சொல்லாமல் இந்தக் காதல் பட்டியல் நிறைவு பெறாதுஎத்தனையோ முறை கேட்டு ரசித்த பாடல்தான் என்றாலும் பாடலில் ஒளிந்திருந்த சுவாரஸ்யம் ஒன்றை சமீபத்தில் அறிய நேர்ந்து இன்னும் கூடுதலாய் ரசிக்கத் தூண்டியதுஅந்த சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும் வரிகள் இவைதான்.

இசை மழையெங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது

எங்களின் ஜீவன்கள்என்று பன்மையில் வர வேண்டியது ஜீவன் என்று ஒருமையில் வருவதை மேலோட்டமாய் பார்த்தால் பிழை எனத் தோன்றும்ஆனால் புலமைப்பித்தனின் கவிச்சிந்தனை விளையாடிய இடம் இதுதான்காதலில் கலந்துவிட்ட பிறகான நிலை ஈருடல் ஓருயிர் என்பதுதானேஇந்த வரி கொண்டிருக்கும் சுவாரஸ்யமும் அதுதான்.

பூவைச் சூட்டும் கூந்தலில்
எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?’
இந்த வரிகளில் இருப்பது காதலா அல்லது காமமா இல்லை இரண்டுமா எப்படி பிரித்தெடுக்கஇப்படியான வரிகளைக் கேட்கும் போது வாலிக்கு அள்ளிக் கொடுத்த இளையராஜா புலமைப்பித்தனுக்கும் ஐம்பது சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறதுஇருப்பினும் கௌரவமான எண்ணிக்கையிலான வாய்ப்புகளை ராஜா புலமைப்பித்தனுக்கு வழங்கியிருக்கிறார் என்பதும் மறுப்பதற்கில்லை.

எம்.ஜி.ஆர் காலகட்டத்தில் பொதுவுடமை தத்துவப் பாடல்களை எழுதிக்கொண்டிருந்தவர் அதன் பின் காதல் பாதையிலேயே அதிகமாய் பயணித்துக் கொண்டிருக்கையில் வெளிவந்தது பாலச்சந்தரின் உன்னால் முடியும் தம்பி திரைப்படம்இத்திரைப்படத்தின் ’புஞ்சை உண்டு நஞ்சை உண்டு’ பாடலில்,

வானத்தை எட்டி நிற்கும் உயர்ந்த மாளிகை
யாரிங்கு கட்டிவைத்து கொடுத்தது
ஊருக்குப் பாடுபட்டு இளைத்த கூட்டமே
வீடின்றி வாசலின்றி தவிக்குது

என்ற வரிகளில் நாட்டில் நிலவும் வர்க்கப் பாகுபாடு குறித்தும்,

உன்னால் முடியும் தம்பி தம்பி’ பாடலில்,

ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும்
சாராய கங்கை காயாதடா
ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும்
காசுள்ள பக்கம் பாயாதடா
என்று மது ஒழிப்பிற்கு முட்டுக் கட்டையாய் இருக்கும் அரசியல் சூழலை நையாண்டியாய் தோலுரித்தும்,

அக்கம் பக்கம் பாரடா சின்ன ராசா’ பாடலில்,
அம்மா பசி என்றொரு கூக்குரல்
அதுதான் இனி தேசிய பாஷை
கட்சிக் கொடிகள் ஏறுது அங்கே
கஞ்சிப் பானை தெருவில் இங்கே
சுதந்திர நாடு சோத்துக்குக் கேடு

நாட்டின் வறுமைச் சூழலையும் பற்றி தனது சிவப்புச் சிந்தனையால் நாட்டின் முக்கிய பிரச்சனைகள் பலவற்றையும் தொட்டு பொட்டில் அடித்தாற் போன்று காத்திரமான வரிகளால் விளாசியிருப்பார்.

பாலச்சந்தரின் அழகனிலும்கூட இது தொடர்ந்தது, “சாதிமல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே” பாடலில்,

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா
இருக்கும் நாலு சுவருக்குள்ளே வாழ நீ ஒரு கைதியா ” என்று சுயநலமாய் வாழ்தல் குறித்து ஏளனமாய் கேள்வி கேட்டு,

கடுகு போல் உன் மனம் இருக்கக் கூடாது
கடலைப் போல் விரிந்ததாய் இருக்கட்டும்” என்று அறிவுரை வழங்கியிருப்பார்.

அழகன் படத்தைச் சொல்லும்போது அதில் மற்ற பாடல்களான ‘சங்கீத ஸ்வரங்கள்’,’மழையும் நீயே’,’தத்தித்தோம்’ ஆகியவற்றின் வரிகள் நினைவிற்கு வருகின்றன. ‘சங்கீத ஸ்வரங்கள்’ பலருக்கும் விருப்பப் பாடல் என்றாலும் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு தடதடத்து ஓடும் சந்த நடைக்கு பாடல் எழுதுவது அவருக்கு மிகப்பிடித்த விஷயம் என்பதால் ’தத்தித்தோம்’ பாடலை அவர் மிக ரசித்து எழுதியிருக்க வேண்டும்

”கண்ணில் பேசும்
சங்கேத மொழியிது
கண்ணன் அறிய ஒண்ணாததா?
உன்னைத் தேடும்
ஏக்கத்தில் இரவினில்
கண்ணுக்கிமைகள் முள்ளாவதா?”

என்று தடதடவென பயணிக்கும் இந்த சந்த நடையில் எத்துனை கவித்துமாய் உட்கார வைத்திருக்கிறார் சொற்களை

கோயில் புறா படத்தின் ’வேதம் நீ இனிய நாதம் நீபாடலில் மேற் சொன்னது போன்றே அடுக்கடுக்காய் செல்லும் சந்தத்திற்கு,

நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது
நித்தம் ஒரு புத்தம் புது இசைத் தமிழ் வடித்தது
ஒருமுறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும்
மனம் குணம் அறிந்தவள்
குழலது சரியுது சரியுது
குறுநகை விரியுது விரியுது
விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும்

என்று சொற்களை அடுக்கி ரசிக்க வைத்திருப்பார். ’மண்ணில் வந்த நிலவே’ பாடலிலும்கூட ’நிலவே மலரே மலரின் இதழே இதழின் அழகே’ என்று ஒரே மாதிரி அடுக்கப்பட்டிருக்கும் சந்தத்தில் அந்தாதியில் விளையாடியிருப்பார்.

சோகப் பாடல்களிலும் குறிப்பிடும்படியான பல பாடல்களை எழுதியிருக்கிறார் புலமைப்பித்தன் அவர்கள்சின்னவீடு படத்தின் ‘வெள்ள மனம் உள்ள மச்சான்’,ஊர்க்காவலன் படத்தின் ‘ஆத்துக்குள்ளே தீ புடிச்சா’, அண்ணா நகர் முதல் தெரு படத்தின் ‘என்ன கத சொல்லச் சொன்னா’ என ஒரு பட்டியல் நீளும்.’ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் ‘உச்சி வகுந்தெடுத்து பிச்சி பூ வச்ச கிளி’ அவரின் சோக வரிகளில் மாஸ்டர் பீஸ் எனலாம்இந்தப் படத்தில் கதையின் நாயகன் தனது சோகத்தை யாரிடமேனும் சொல்லி அழ வேண்டும் போல மன அழுத்தத்தில் இருப்பான்ஆனாலும் அவனுக்கான சோகத்தை வெளிப்படையாயும் சொல்லவிட முடியாதபடியான சூழலுக்கு தமிழாசிரியரான புலமைப்பித்தன் இரட்டற மொழிதல் அணியினைக் கொண்டு அந்த பாடலில் அந்த நாயகனின் மனக்குமுறலை வெளிக்கொணர்ந்திருப்பார்இதே வரிசையில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு பாடல் ஆறே வரிகளையே கொண்டிருந்தும் என்றும் நிலைத்து நிற்கப்போகும் நாயகனின் ‘தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே’.

எவண்டி ஒன்ன பெத்தான்', ’வாட்ட கருவாட்'  காலத்திலும் ‘ஆடி வா பாடி வா ஆணழகைத் தேடி வா’ என்று நின்று விளையாடிக்கொண்டிருக்கும் புலவர் புலமைப்பித்தனின் ‘கூகூ என்று குயில் கூவாதோ’,’கண்மணியே பேசு’, ‘சந்தத்தில் படாத கவிதை‘ போன்ற இன்னும் எத்தனையோ சிலாகிக்க வேண்டிய பாடல்களை இந்த கட்டுரையின் நீளம் கருதி மனமில்லாமல் கடந்து போகிறேன்.


இத்தனை சிறப்பான பங்களிப்பை செய்திருக்கும்/செய்துகொண்டிருக்கும் புலவர் புலமைப்பித்தன் போன்றோரை வளரும் இளைய தலைமுறை பாடலாசிரியர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொண்டுகண்ட சொற்களையும் இட்டு நிரப்பி நானும் பாடலாசிரியர் என்று கிளம்பும் திடீர் பாடலாசிரியர்களின் அர்த்தமற்ற வரிகளுக்கும் தலையாட்டும் இன்றைய இளைய தலைமுறையின் ரசனையை உயர்த்தினால்திரையிசைப் பாடல்களை சிலாகித்து கொண்டாடும் எங்களைப் போன்று நாளை உங்களையும் கொண்டாட ஒரு தலைமுறை இருக்கும்.