Monday, May 4, 2009

சின்ன பசங்க நாங்க..!

கோடைவிடுமுறை வந்துவிட்டாலே பாட்டு,டான்ஸ்,கராத்தே, கம்ப்யூட்டர் இப்படி எந்த ஒரு சிறப்பு வகுப்புகளுக்கு செல்ல வேண்டுமே என்ற பயமில்லாத காலம் எனது பால்யம்(வயசெல்லாம் கேட்கக்கூடாது). விடுமுறையை விடாமல் முறையாக அனுபவித்த அந்த நாட்களின் நினைவுகள் ஆனந்தத்தை மட்டுமே குறையாது கொடுக்கும் ஒரு அட்சயப் பாத்திரம். அதுவும் எனது பால்யம் கிராமத்தில் அமைந்தது இன்னும் சிறப்பு.

விடுமுறை நாட்களில் மட்டும் ஏனோ ஆறுமணிக்கெல்லாம் முழிப்பு (முழிப்பா/விழிப்பா?)வந்துவிடும், எழுந்ததும் முகத்தைக் கூட ஒழுங்காக கழுவாமல் நேராக பள்ளிக்கூடத்திற்கு எதிரே இருக்கும் வேப்பமரத்தின் கீழ் ஊரின் அனைத்து சிறுவர்களும் கூடி சிறுசிறு குழுக்களாகப் பிரிந்து கிட்டிப்புல், கோலிக்குண்டு(இதை வைத்து பேந்தாஸ், லாக்கு,மாண்டா இப்படி நிறைய விளையாட்டுகள் இருக்கின்றன), புட்டு,பம்பரம்,பிள்ளையார் பந்து, எர்த் குச்சி, ஆபியம் சுதாபியம்(பச்சக் குதிர) என பிரிந்து விளையாட ஆரம்பித்தால் வெயில், பசி, தாகம் எதுவுமே தெரியாமல் நேரம் போய்க்கொண்டிருக்கும்.

அந்த வழியா போற பெருசுங்க "ஓரே அமாவாசையிலே போட்ட குட்டிங்க மாதிரி கிடந்துகிட்டு என்னா சத்தம் போடுறாய்ங்க,மறுபடியும் பள்ளிக்கொடம் தொறக்குற வரைக்கும் இவய்ங்க இம்சை பெரும் இம்சையால்ல இருக்கும்" என்று புலம்பியபடியே செல்வது ஒவ்வொரு கோடையிலும் நடக்கும்.

மதியம் பணிரெண்டு மணிக்குமேல் வெயிலின் உக்கிரத்தை தணித்துக்கொள்ள அப்படியே ஒரு பெரும்படையாக  திரண்டு ஏரிக்கு செல்வோம், எங்க ஏரியாவிலேயே எங்க ஊரு ஏரி கொஞ்சம் பெரியது, கோடையில் பக்கத்து ஊர் குளத்திலெல்லாம் தண்ணீர் வற்றிவிட்டாலும் எங்க ஊர் ஏரியில் ஓர் ஒரத்தில் குட்டை மாதிரி ஒரு சின்ன ஏரியாவில் தண்ணீர் கிடக்கும். நன்கு தெளிந்து கிடக்கும் நீரில் திமுதிமுவென்று இறங்கியதும் முங்கு நீர் போட்டி,ஓந்தி,பேபே என்று நீர் விளையாட்டுகள் ஆரம்பமாகிவிடும்.

விளையாட்டில் ஆழ்ந்திருக்கும்போது எங்கிருந்துதான் வருவாரென்றே தெரியாது முருகையன்,முருகையன் சுருங்கச் சொன்னால் மீசையில்லா ஐயனார்.மனிதர் அப்படி ஒரு பிரமாண்ட உயரம்.அத்தனை பசங்களின் ட்ரௌசரையும் ஒரே அள்ளாக அள்ளி முட்டாக குவித்து கையில் ஒரு பெரிய பூவரசங்குச்சியோடு நின்று கொண்டு "எல்லா பயலும் அப்படியே வாயையும் ,........ பொத்திகிட்டு கரையேரி இங்கே வாங்க" என்று சிம்மக் குரலிடுவார்.(இதுவும் எல்லா கோடையிலும் நடக்கும்).ஒவ்வொருவராக பிறந்த(திறந்த)மேனியாக அவரின் முன் நடுங்கியயபடியே அணிவகுத்து நிற்போம். இரண்டிரண்டு பேராக ஒருத்தர் காதை இன்னொருத்தர் பிடித்துக் கொண்டு,இனிமேல் இப்படி செய்ய மாட்டோம் என்று சொல்லிக்கொண்டே தோப்புகரணம் போடச் சொல்வார். பிறகு அப்படியே திரும்பி நீங்க குளிச்ச தண்ணிய பாருங்கடா என்பார்,சேச்சே இந்த தண்னியிலயா குளிச்சோங்கிற லெவெலில் சேறும் சகதியுமாக இருக்கும்."இப்படி பண்ணி வெச்சா எப்படிடா நாங்க குளிப்பது" என்று கூறிவிட்டு "ஐந்து நிமிசத்திலே எல்லோரும் ஓடிப்போகணும்" என்று விரட்டிவிடுவார்.

எல்லோரும் அவரவர் ட்ரௌசரையும்,சின்னக்கவுண்டர்(விஜயகாந்த் வித் பம்பரம்),எஜமான்,அமரன் பெயர்கள் அச்சிடப்பட்ட பனியன்களையும் எடுத்துக் கொண்டு சிறிது தூரம் ஓடிவந்து,"போய்யா முருகையா, எங்க இப்ப அடி பாக்கலாம்" என்று பின்பக்கத்தை அவருக்கு காட்டி ஒரு குத்து டான்ஸ் போட்டு அவரை வெறுப்பேத்தி தெறித்து ஓடுவோம். திரும்பவும் அடுத்த நாள் அதே நேரம், அதே குட்டை ,அதே சேறும் சகதியும் விடுமுறை முடியும்வரை தொடரும்.

பிறகு சாயங்காலம் கபடி, ஆறுபேர் சந்தன பேர்,ஐஸ் பாய்ஸ்,திருடன் போலீஸ் என மீண்டும் ஒரு பெரிய பட்டியல் விளையாட்டுகள் (இந்த விளையாட்டுகளை பற்றி மட்டுமே ஒரு தனி பதிவிடலாம்)இரவு பத்து மணிவரை நீளும். இப்படியாக கழிந்த எனது பால்ய நாட்களின் உண்ணதம் அப்போது கடக்குபோது தெரியவில்லை,இப்போது நினைக்கும்போது இனிக்கிறது.

இப்படி கட்டுதறி இல்லாது பலவிதமான விளையாட்டுகளில் மூழ்கி சிறகடித்துப் பறந்த அந்த சமயத்தில் எப்படி கிரிக்கெட் எங்கள் ஊருக்குள் அதிரடியாய் நுழைந்து அத்தனை விளையாட்டுகளையும் கிளீன் போல்டாக்கி தனியாவர்த்தனம் செய்தது என்பதனையும், எங்களுக்கு அடுத்த தலைமுறையை கேபிள் டீவி எப்படி ஆக்கிரமிப்பு செய்து எனது கிராமத்தின் இயல்புநிலை தொலைந்து போனதென்பதையும் அடுத்த பதிவில் காணலாம்.

இந்த பதிவை யூத்ஃபுல் விகடனில் குட் பிளாக்ஸ் பகுதியில் தேர்வு செய்ததற்கு நன்றி யூத்ஃபுல் விகடன்...!
இந்த கட்டுரையின் தொடர்ச்சி இங்கே:

எங்க ஊரு 20 - 20

கேபிள் டீவியின் வருகையும் இயல்பை தொலைத்த கிராமங்களும்.

8 comments:

முரளிகண்ணன் said...

ஞாபகம் வருதே ஞாபகம் வருதே

Unknown said...

ரொம்ப நல்ல பதிவு அண்ணா.. :)) இப்போ பசங்க யாருமே வெளில் போயி விளையாடறதே இல்ல.. எல்லாம் வீடியோ கேம்ஸ்... :((

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ல்லோரும் அவரவர் ட்ரௌசரையும்,சின்னக்கவுண்டர்(விஜயகாந்த் வித் பம்பரம்),எஜமான்,அமரன் பெயர்கள் அச்சிடப்பட்ட பனியன்களையும் எடுத்துக் கொண்டு //

வயசு தெரியுதே தல...,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//எங்களுக்கு அடுத்த தலைமுறையை கேபிள் டீவி எப்படி ஆக்கிரமிப்பு செய்து எனது கிராமத்தின் இயல்புநிலை தொலைந்து போனதென்பதையும் அடுத்த பதிவில் காணலாம்.//

எதிர்பார்க்கிறோம்

KRICONS said...

Congrats Now your Post displayed in Youthful Vikatan Home page

நாடோடி இலக்கியன் said...

@முரளிகண்ணன்,
//ஞாபகம் வருதே ஞாபகம் வருதே//

ஆமாம் முரளி.
ரொம்பவே வருது.ப்ச் அதெல்லாம் ஒரு காலம்..:)

@ஸ்ரீமதி,
என்னோட அக்கா பசங்களும் கூட எப்போதும் வீடியோ கேம்ஸ் இல்லாவிடில் சுட்டி டீ.வி என்று முழுவதும் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறார்கள்.

,

@@SUREஷ்,
//வயசு தெரியுதே தல...,//

அட ஆமால்ல.

//எதிர்பார்க்கிறோம்//
கண்டிப்பா சுரேஷ்.இந்த பதிவு வேறுமாதிரி எழுதியிருக்காலாமென்று இப்போது தெரிகிறது.ஏதோ ஸ்கூல் பசங்க எழுதின கட்டுரை மாதிரி தெரிகிறது.

@KRICONS,
வருகைக்கும்,தகவலுக்கும் மிக்க நன்றிங்க.

மறத்தமிழன் said...

நாடோடி இலக்கியன்,

மீண்டும் பால பருவத்திற்கு அழைத்து சென்றதற்கு நன்றி !

பெரும்பாலான பசங்களின் டவுசரில் பட்டன்கள் இருக்காதே...அருந்து போயிருக்கும்..ஊக்கு(பின்) வைத்தோ அல்லது சும்மா முடிச்சு போட்டோ
ட‌வுச‌ர் போட்டு அழைந்த‌ கால‌ம்...
அது ஒரு அழகிய கனாக்காலம் !!!
அப்புரம்,எங்க‌ள் ஊர்ப்ப‌க்க‌ம் குளத்தை ஊர‌ணினு சொல்வோம்.
அன்புட‌ன்,
ம‌ற‌த்த‌மிழ‌ன்...

நாடோடி இலக்கியன் said...

@ம‌ற‌த்த‌மிழ‌ன்,
//ஊக்கு(பின்) வைத்தோ அல்லது சும்மா முடிச்சு போட்டோ
ட‌வுச‌ர் போட்டு அழைந்த‌ கால‌ம்...//

ஆமாங்க,பெரும்பாலும் பள்ளியில் கொடுக்கும் அந்த காக்கி கால் சட்டையைத்தான் நிறைய பசங்க அணிந்திருப்பாய்ங்க.

எங்க ஊரிலும் ஊருணி இருக்கிறது, இடுகாட்டிற்கு அருகில் உள்ளதைத்தான் ஊருணி என அழைப்பார்கள். மற்றவை குளம்தான்.

நன்றி உங்க வருகைக்கும் கருத்துக்கும்.